TNPSC Group 4 தேர்வு அறிவிப்பு நாளை! 10,000+ அரசு பணியிடங்கள்... தேர்வு எப்போது?

 

 

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை (அக்.6) வெளியாக உள்ளது.TNPSC-ன் 2026-ம் ஆண்டுக்கான ஆண்டு தேர்வு அட்டவணையில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு அக்டோபர் 6-ம் தேதி வெளியிடப்படும் என்றும், எழுத்துத் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை, பதவிகளின் விவரம், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெறும்.கடந்த குரூப் 4 தேர்வில் 4,662 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலியிடங்களின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், உண்மையான காலிப்பணியிட எண்ணிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே உறுதி செய்யப்படும்.

குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு பணியிடங்கள் இடம்பெறுகின்றன. சில பணியிடங்களுக்கு கூடுதல் கல்வித்தகுதி அல்லது தொழில்நுட்ப தகுதிகள் நிர்ணயிக்கப்படலாம்.பெரும்பாலான குரூப் 4 பணியிடங்களுக்கு அடிப்படை கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை ஏராளமானோர் இந்த தேர்வை எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த குரூப் 4 தேர்வில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பணிக்கான முக்கிய தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் TNPSC Group 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதால், தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அறிவிப்பு வெளியானதும், காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப தொடக்க தேதி, கடைசி தேதி, தேர்வு கட்டணம், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ TNPSC இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.