இன்று ரூ.16,800 போனஸ்... டாஸ்மாக் ஊழியர்களுக்கு மெகா தீபாவளி பரிசு வழங்கி தமிழக அரசு உத்தரவு!

 

வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக்  நிறுவனத்தில் பணிபுரியும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கிடத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான நிதியாண்டுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை  என மொத்தம் 20% போனஸ் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸாகக் கிடைக்கும். இதற்கான மாத அடிப்படை ஊதிய உச்ச வரம்பு ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போனஸ் வழங்குவதற்கான நிதி இன்று அனைத்து மாவட்ட மேலாளர்களின் செயல்பாட்டுக் கணக்குகளுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். நிதி வரப்பெற்றவுடன் எந்தவித தாமதமுமின்றி ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகத் தொகையைச் செலுத்தவும், அதற்கான ரசீதுகளைப் பெற்றுக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் கிடங்கு கணக்கில் உள்ள இருப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், உபரி நிதி இருந்தால் அதை அலுவலகச் செலவினங்களுக்குப் பயன்படுத்தவும் டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.