இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை.. பத்திரமாக இருங்க மக்களே!

 

குமரிக்கடல் பகுதியிலிருந்து உள் தமிழகம் வழியாக ஆந்திராவின் ராயலசீமா வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) மற்றும் தெற்கு கேரளம், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மழைப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கத்தால் இன்று டெல்டா, உள் மற்றும் தென் தமிழகத்தைச் சேர்ந்த 18 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரி வி.ஆர்.துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்று நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாகச் சேலம் மாவட்டம் ஆத்தூரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாகத் திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம், சென்னை ஈஞ்சம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நாளை நவம்பர் 26ம் தேதி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நவம்பர் 27-ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் வானிலை அறிவிப்புகளுக்கு ஏற்ப உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.