"இன்று தமிழ்நாட்டின் கருப்பு நாள்" - வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேர்ந்த கொடூர அம்மோனியா வாயு கசிவு விபத்து, ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ள சூழலில், இச்சம்பவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
விபத்தில் நச்சு வாயுவைச் சுவாசித்துத் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்தவுடன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவசரமாக நேரில் வந்து பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘பெரியபாளையம் தனியார் தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவில் அம்மோனியா நச்சு வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் என் நெஞ்சை உலுக்குகிறது. விபத்தில் சிக்கித் துரதிஷ்டவசமாகத் தங்களது இன்னுயிரை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்குத் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்வாதாரம் தேடித் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள், நச்சு வாயு கசிந்து கொடூரமான முறையில் உயிரிழந்துள்ள இந்தத் துயரமான நாள், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு "கருப்பு நாள்" ஆகும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற தொழிலாளர்களின் நிலை குறித்துக் கவலை தெரிவித்த அவர், தற்போதைய தவெக அரசிற்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:
"இவ்விபத்தில் நச்சு வாயுவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் தங்கு தடையின்றி உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை போதுமானதல்ல; அதனை உடனடியாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை எவ்விதத் தொய்வுமின்றிப் பாதுகாப்பாகச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்."