இன்று அட்சய திருதியை... இதை வாங்க மறக்காதீங்க.. ஐஸ்வர்யம் பெருகும்!
சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் மூன்றாவது நாளில் ரோகிணி நட்சத்திரத்தில் திருதியை திதியில் அட்சய திருதியை அனுசரிக்கப் படுகிறது. இன்று அட்சய திருதியை தினம் கொண்டாடப்படுகிறது.
மகாபாரதத்தில், வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது இது போன்ற ஒரு அட்சய திருதியை தினத்தில் தான். இதே நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை “பவிஷ்யோத்தர-புராணம்” விரிவாக எடுத்துரைக்கிறது. இந்த தினத்தில் தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. குபேரன் நிதி கலசங்களை பெற்ற நன்நாளும் இது போன்றதொரு அட்சய திருதியை தினத்தில் தான்.
சிவபெருமான் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தில் தான். அட்சய திருதியை தினத்தில் பரசுராமர் அவதாரம் எடுத்தார். அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார். வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தில் திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள். ஒரிசா மாநிலத்தில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது.
இந்த அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள். அதனால் தங்கம் விலை உயர்ந்துக் கொண்டே செல்கிறதே என்று கவலைப்படுபவர்கள், அட்சய திருதியை அன்று தங்கம் கட்டாயம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
நமது மனசும், வேண்டுதல்களும் நியாயமாகவும், உண்மையாகவும் இருந்தால் இறைவன் நிச்சயம் செவி சாய்ப்பார். அதனால் இன்றைய நன்னாளில், சாதாரண கல் உப்பை வாங்கி வீட்டில் வைத்து இறைவனை மனமுருகி வழிபடுங்கள். தங்கம் வாங்கி வழிபட்டால், என்ன பலன் கிடைக்குமோ, அதை விட பன்மடங்கு அதிக பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.