இன்று ரக்‌ஷா பந்தன்.. ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்படுவதற்கான புராண மற்றும் வரலாற்று காரணங்கள்!

 

சகோதர பாசம், பாதுகாப்பு மற்றும் அன்பின் வெளிப்பாடாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் பின்னணியில் பல ஆன்மீக மற்றும் புராணக் கதைகள் உள்ளன.

ஒருமுறை போரின் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததைக் கண்ட திரௌபதி, துளியும் தாமதிக்காமல் தனது சேலையின் ஒரு பகுதியை கிழித்து கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டி ரத்தக் கசிவைத் தடுத்தார். இதனால் மனம் நெகிழ்ந்த கிருஷ்ணர், திரௌபதிக்கு எத்தகைய ஆபத்து வந்தாலும் தான் காப்பதாக வாக்களித்தார்.

பிற்காலத்தில் சபையில் திரௌபதிக்கு அவமானம் நேர்ந்தபோது கிருஷ்ணர் தனது தெய்வீக சக்தியால் அவரது மானத்தைக் காத்தது இந்நிகழ்வின் அடிப்படையில்தான் நிகழ்ந்தது என்பதும், இதையே ஆவணி மாத பௌர்ணமியில் ரக்ஷா பந்தனாகக் கொண்டாடுவதாக ஐதீகம் உள்ளது.

விஷ்ணு புராணத்தின்படி, மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க வைகுண்டத்தை விட்டு அவரது அரண்மனையில் தங்கிய விஷ்ணு பகவானைப் பிரிந்து வருந்த லட்சுமி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடத்தில் சென்று மகாபலியின் கையில் பாதுகாப்புக் கயிற்றைக் கட்டினார். இதனால் மகிழ்ந்த மகாபலி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, தன் கணவரான விஷ்ணுவை மீண்டும் வைகுண்டத்திற்கு அனுப்ப வேண்டும் என்று லட்சுமி தேவி கேட்டுப் பெற்றார். இதன் அடிப்படையில் சகோதரர்களின் பாதுகாப்பிற்காகக் கைகளில் கயிறு கட்டும் வழக்கம் உருவானது.

தொடக்கத்தில் வடமாநிலங்களில் மட்டுமே மிகவும் பிரபலமாக இருந்த இந்தப் பண்டிகை, தற்போது சாதி, மத பேதமின்றி ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பாசத்தையும் பரஸ்பர அக்கறையையும் வெளிப்படுத்தும் விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டி இனிப்பு ஊட்டுவதும், அதற்குப் பதிலாகச் சகோதரர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றுப் பரிசுகள் வழங்குவதும் இதன் முக்கிய ஐதீகமாகும்.