இன்று சூரசம்ஹாரம்... அதிகாலையில் காப்பு கட்டுங்க.. முழு விரத பலன்கள்!
இன்று கந்தசஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இன்று அதிகாலையிலேயே காப்பு கட்டுங்க. விரதத்தின் முழு பலன்களையு பெறுங்க. முருகப்பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்த நாள் என்பதால், கந்தசஷ்டிக்கு தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் இன்று ஒருநாள் சஷ்டி விரதம் இருப்பது மிகப் புனிதமானதாக கருதப்படுகிறது. அனைத்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் இன்றைய தினம் மட்டுமாவது விரதம் இருந்து முருகனை வழிபடலாம்.
ஆறாம் நாளான இன்று அதிகாலையில் எழுந்து குளித்து, அருகிலுள்ள கோவிலில் காப்பு கட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரை விரதத்தை தொடங்க வேண்டும். இன்றைய நாள் முழுவதும் தண்ணீர் தவிர வேறு உணவு எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள், வயதானவர்கள் இப்படி கடுமையாக விரதம் இருக்காமல் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து வழிபடலாம். வீட்டில் ஷட்கோண கோலம் போட்டு, அதில் 6 நெய் விளக்குகள் ஏற்றி காலை, மாலை இரு வேளையும் வழிபாடு செய்ய வேண்டும்.
முருகனுக்கு சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் உட்பட 6 வகையான நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. திருச்செந்தூரில் மாலை 4 மணிக்கு மேல் நடைபெறும் சூரசம்ஹாரம் நேரம் வழிபாட்டிற்கு உகந்ததாகும். சூரசம்ஹாரம் முடிந்தபின் குளித்து, நைவேத்திய பால், சர்க்கரை பொங்கல் எடுத்துக்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அன்றைய மாலை முருகன் பாடல்கள் பாடி, கந்தசஷ்டி கவசம், “சரவண பவனார்” பாடலை பாராயணம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.