இன்று ஹயக்ரீவர் ஜெயந்தி.. வேதங்களை மீட்டவர்.. கல்வி, ஞானம் காக்கும் இறைவனின் அவதாரம்!

 

இந்து மத புராணங்களின்படி, கல்வி, அறிவு மற்றும் ஞானத்தின் அதிபதியான ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த நன்னாள் 'ஹயக்ரீவர் ஜெயந்தி' என்று கொண்டாடப்படுகிறது. இன்று ஹயக்ரீவர் ஜெயந்தி  கொண்டாடப்படுகிறது. மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஹயக்ரீவர் அவதாரம் மிகவும் தனித்துவமானது. மனித உடலும், குதிரை முகமும் கொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் இவர், ஞானத்தின் வடிவமாகப் போற்றப்படுகிறார்.

மது மற்றும் கைடபன் என்ற அசுரர்கள் பிரம்ம தேவரிடமிருந்து வேதங்களைக் கவர்ந்துச் சென்று கடலுக்கு அடியில் மறைத்து வைத்தனர். உலகைப் படைக்கும் தொழிலை மேற்கொள்ள முடியாததால் பிரம்மனும் தேவர்களும் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். அசுரர்களை அழிக்கவும், வேதங்களை மீட்கவும் விஷ்ணு பகவான் குதிரை முகமும் மனித உடலும் கொண்ட 'ஹயக்ரீவர்' வடிவத்தை எடுத்தார்.

கடலுக்குள் சென்று அசுரர்களை வதம் செய்த ஹயக்ரீவர், அங்கிருந்து வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார். வேதங்கள் மீட்கப்பட்ட இந்த புனித நாளே ஹயக்ரீவர் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது.

ஹயக்ரீவர் கல்வி மற்றும் கலைகளுக்கு உரிய தெய்வமாகக் கருதப்படுகிறார். கலைமகள் சரஸ்வதி தேவியே கல்வித் திறனுக்காக ஹயக்ரீவரை வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் கல்வி பயில்வதில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி பெருகவும், போட்டிகளில் வெற்றி பெறவும் இந்நாளில் ஹயக்ரீவரைத் தீவிரமாக வழிபடுவர்.

இத்தினத்தில் பெருமாள் கோவில்களிலும், ஹயக்ரீவருக்குக்கென உள்ள தனி சந்நதிகளிலும் சிறப்பு ஹோமங்கள், திருமஞ்சனம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஏலக்காய் மாலை சாற்றி, ஏலக்காய் அல்லது நெய் கலந்த பிரசாதத்தைச் படைத்து இவரை வழிபட்டால் கல்வித் தடைகள் நீங்கி ஞானம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.