இன்று ஈ.வெ.ரா பெரியார்  பிறந்தநாள்.. தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என கொண்டாடப்பட்ட ‘திராவிட அரசியலின்’ பகுத்தறிவு பகலவன்!

 

திராவிட அரசியலின் ஆரம்ப சிந்தனை பெரியாரிடம் இருந்து வந்தது தான். அந்த திராவிட சிந்தனை தான் இதுநாள் வரை தமிழக அரசியலை வழிநடத்தி வருகிறது. இப்போதைய தவெகவும் பெரியாரை நீக்கி அரசியல் செய்யாமல், பெரியார் கைபிடித்தே அரசியலில் தவழ தொடங்கியது. பெரியாரைத் தவிர்த்துவிட்டு தமிழக அரசியலை யாரும் வழிநடத்த முடியாது என்கிற நிலையே நீடித்து வருகிறது. நீதிக்கட்சியின் நிறுவனர் பகுத்தறிவு பகலவன் பெரியார். இவரது இயற்பெயர் ஈவேராமசாமி. இவர் அன்பாக தந்தை பெரியார் என அழைக்கப்பட்டார். 1879 செப்டம்பர் 17 ல் ஈரோட்டில் பிறந்தார். சிறு வயது முதலே தன்னுடைய பகுத்தறிவால், புராணக் கதைகளில் வினாக்களுக்கு விடை தேடினார். 

1919ல் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். 1925ல் பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கம் ‘மூடப்பழக்க வழக்கங்களை மக்களிடத்திலிருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டது. நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 1944ல் ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றம் செய்தார். 

இதன் கொள்கைகள் மக்களை வெகுவாக ஈர்த்தன. திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, கடவுள்மறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி இவைகளை வலியுறுத்தியது. சமூக இயக்கமாக மக்களிடையே வளர்ந்து வந்தது. உலகின் மாபெரும் சுயசிந்தனையாளராக திகழ்ந்த பெரியார், 1973 டிசம்பர் 24ல் தமது 96 வது வயதில் இயற்கை எய்தினார்.