இன்று காரடையான் நோன்பு... இனிப்பு கார அடை செய்வது எப்படி? ஈஸியான ரெசிப்பி!
தமிழகம் முழுவதும் இன்று காரடையான் நோன்பினை சுமங்கலி பெண்களால் கொண்டாடி வருகின்றனர். மாசி மாதமும், பங்குனி மாதமும் இணையும் தினத்தைக் காரடையான் நோன்பாக விரதமிருந்துக் கொண்டாடி வருகிறோம். மாங்கல்ய பலம் தரும் சக்தி வாய்ந்த விரதம் இது.
காரடையான் நோன்பு கடைபிடித்து வருபவர்கள் நோன்பிற்காக இனிப்பு கார அடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
வெல்லம்- 1 கப்
தேங்காய் - 1/2 கப்
காராமணி -1/4 கப்
ஏலக்காய் தூள்- 1சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
காராமணியை 4 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். காராமணியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.
மீண்டும் வாணலியில் சேர்த்து வெல்ல கரைசல் கொதிக்க ஆரம்பிக்கும் போது வேக வைத்த காராமணி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய்ப் பொடி அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இதன்பிறகு வறுத்த பச்சரிசி மாவை சிறிது சிறிதாக போட்டு கட்டி தட்டாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
மாவு நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து மாவினை இறக்கி வைத்து விட வேண்டும். கையில் சிறிது வெண்ணெய் தடவி அதில் இந்த மாவை அடை போன்று தட்டிவிட்டு வாழை இலையில் வைக்கவும். இவைகளை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் தித்திப்பான சுவையான காரடையான் நோன்பு அடை தயார். இதனை காமாட்சிக்கு படைத்து ஸ்லோகம் சொல்லியடியே தாலிச்சரடை மாற்றிக் கட்டிக் கொள்ள வேண்டியது தான்.