இன்று ஆசிரியர்களுக்கானத் தகுதித்தேர்வு.. பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ் அணிந்து வர தடை - முழு வழிகாட்டு நெறிமுறைகள்!

 

இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வு அறைக்குள் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, தேர்வர்கள் பெல்ட், ஷூ மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் அணிந்து வர ஆசிரியர் தேர்வு வாரியம் தடை விதித்துள்ளது.

தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனைவரும் சாதாரண செருப்புகள் மட்டுமே அணிந்து வர வேண்டும். தடிமனான அடிப்பாகம் கொண்ட ஷூக்கள் மற்றும் ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்து வர முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்கள் தங்களது பேண்ட்டுகளில் பெல்ட் அணிந்து வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு அறைக்குள் வழக்கமான அனலாக் கடிகாரங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஸ்மார்ட் வாட்ச் மற்றும் டிஜிட்டல் வாட்ச் அணிந்து வரக் கூடாது.

செல்போன்கள், புளூடூத் கருவிகள், மைக்ரோபோன்கள், ஹெட்போன்கள் மற்றும் கால்குலேட்டர்கள் உள்ளிட்ட எந்தவொரு எலெக்ட்ரானிக் பொருட்களையும் தேர்வு மைய வளாகத்திற்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜூலை 4-ம் தேதி தாள்-I தேர்வும், நாளை ஜூலை 5-ம் தேதி தாள்-II  தேர்வும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரம்மாண்டமாக நடைபெறுகின்றன.

தேர்வு மைய நுழைவாயிலிலேயே ஆண் மற்றும் பெண் தேர்வர்களுக்குத் தனித்தனியாகப் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் 'மெட்டல் டிடெக்டர்' கருவிகள் மூலம் தீவிரப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. அப்போது தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவை மையத்திற்கு வெளியேவே பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் தங்களது ஹால் டிக்கெட்டுடன் வருகை தர வேண்டும். 9.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.