இன்று திருவோணம் பண்டிகை - மகாபலி சக்கரவர்த்தி - வாமன அவதார புராண வரலாறு!

 

கேரளா மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள் ஓணம் பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

அசுர குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தன் நாட்டு மக்களை அன்போடு ஆட்சி செய்து, தேவர்களுக்கு இணையான புகழுடன் தான தர்மங்களைச் செய்தவர் மகாபலி சக்கரவர்த்தி. மகாபலியின் அகந்தையை அடக்கவும், அவரை ஆட்கொள்ளவும் மகாவிஷ்ணு 'வாமனன்' என்ற சிறு முனிவராக அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது விஷ்ணு என அறிந்தும் மகாபலி வாக்குக் கொடுத்தார். வாமனன் விஸ்வரூபம் எடுத்து விண்ணை ஒரு அடியாலும், மண்ணை இரண்டாவது அடியாலும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்க, மகாபலி தன் தலையைக் காட்டினார்.

மகாபலியின் பக்தியையும் தியாகத்தையும் மெச்சிய விஷ்ணு, அவருக்கு வரம் அளித்தார். தன் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்பதைக் காண ஆண்டுதோறும் ஒருமுறை பூமிக்கு வர அனுமதிக்குமாறு மகாபலி வேண்டினார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மகாபலி மக்களைக் காண வரும் நாளே ஓணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் முதல் நாளில் இருந்து 10 நாட்களும் வாசலில் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி சக்கரவர்த்தியை மக்கள் முறைப்படி வரவேற்கின்றனர். பெண்கள் 'கசவு' என்ற வெள்ளை நிறப் பாரம்பரிய புடவை அணிவர். முதல் 3 நாட்களில் பரிசுகள் பரிமாறப்படுகின்றன.

4-வது நாளில் 9 வகை உணவுகளுடன் ஓண சத்யா விருந்தும், 5-வது நாளில் (அனுஷம்) 'அனிளம்' என்ற பாரம்பரியப் படகுப் போட்டியும் நடத்தப்பட்டு, 10-வது நாளான திருவோணத்தன்று பண்டிகை நிறைவடைகிறது.