இன்று கடைசி தேதி... டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மறக்காதீங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த சிவில் சேவைகள் தேர்வு-IV எழுத ஏற்கெனவே விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவற்றை இணையவழியில் திருத்தம் செய்ய இன்று நவம்பர் 11ம் தேதி கடைசி நாளாகும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த நவம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பத் திருத்தக் காலம் நவம்பர் 9 முதல் நவம்பர் 11 இரவு 11:59 மணி வரை மட்டுமே செயல்படும். பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ் விவரங்கள், முகவரி, புகைப்படங்கள் மற்றும் தட்டச்சு/பயிற்சி தொடர்பான விவரங்களில் பிழைகள் இருந்தால் தேர்வர்கள் இன்று இரவுக்குள் திருத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரித்தண்டலர், வனக் காவலர் உள்ளிட்ட 46 வகையான பதவிகளில் மொத்தம் 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெரும்பாலான பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி போதுமானது. சில குறிப்பிட்ட பதவிகளுக்குப் பட்டப்படிப்பு, பி.காம் மற்றும் தட்டச்சு சான்றிதழ்கள் அவசியமாகும். இத்தேர்வுக்குரிய எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10-ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறவுள்ளது.
இறுதி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேர்வர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnpsc.gov.in அல்லது tnpscexams.in வாயிலாக உடனடியாகத் திருத்தங்களை மேற்கொண்டு உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.