இன்று குழந்தை வரம் தரும் மாங்கனி திருவிழா.... காரைக்காலில் குவிந்த பக்தர்கள்!

 

இன்று காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெறுவதையொட்டி கடந்த இரு தினங்களாகவே பக்தர்கள் காரைக்காலில் குவிந்து வருகின்றனர். சிவன் மீது மாங்கனி வீச தயாராகி வருகின்றனர். ஆதியும் அந்தமும் இல்லாமல் பிறப்பும், இறப்பும் இல்லாத எம்பெருமான் சிவபெருமான். அவருக்கும் ஒரு ‘அம்மை’ யாக திகழ்பவர் காரைக்கால் அம்மையார். தமிழில் முதன் முதலாக பதிகம் பாடும் முறையை அறிமுகம் செய்தவர் காரைக்கால் அம்மையார் தான் என்பது உறுதி. இவருடைய பதிகங்களைப் பின்பற்றியே, மூவரின் தேவார பதிகங்கள் பாடப்பட்டதாகவும் குறிப்பாக ‘அந்தாதி’ என்னும் இலக்கண முறையை அறிமுகம் செய்து வைத்தவராகவும் காரைக்கால் அம்மையார் அறியப்படுகிறார்.

புனிதவதியாக பிறந்து நாயன்மார்களில் ஒருவராக அறியப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இவர் ஒரு முறை பணியாள் மூலமாக கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை, அடியாராக வந்த ஈசனுக்கு விருந்தாக அளித்து விட்டார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த கணவருக்கு, எஞ்சியிருந்த ஒரு மாங்கனியை சாப்பிடக் கொடுத்தார். அந்த மாங்கனி சுவையாக இருந்ததால், மீதமிருந்த மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கணவர் பணித்தார்.

‘அடியாருக்கு விருந்து படைத்து விட்டேன் என்று கூறினால், கணவர் கோபித்துக் கொள்வாரோ?’ என பயந்த புனிதவதி, பூஜை அறையில் ஈசனை வேண்டியதும் அவரது கையில் ஒரு மாங்கனி வந்தது. அதைக் கொண்டு போய் கணவனுக்கு கொடுத்தார். முன்பு சாப்பிட்ட பழத்தை விட, இந்தப் பழம் இன்னும் அதிக சுவையுடன் இருந்தது. ஒரு மரத்தின் காயில் எப்படி வேறுபட்ட சுவை உருவாகும் என புனிதவதியின் கணவன், அவரிடம் உண்மையைக் கூறும்படி வலியுறுத்தினார்.

புனிதவதி நடந்த விவரங்களை ஒன்று விடாமல் கணவரிடம் கூறினார். இறைவனே மாங்கனியைக் கொடுத்தானா என்று அதிர்ந்தவர், “அப்படியானால் ஈசனிடம் வேண்டி மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்று வா” என்று மனைவிக்கு கட்டளையிட்டார். புனிதவதியும் அதன்படியே ஈசனை வேண்டி, மற்றொரு கனியை பெற்றார். இதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் கொண்ட புனிதவதியின் கணவன், ‘இவள் தெய்வப்பெண்’ என்று கருதி, அவளை விட்டு நீங்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதையறிந்த புனிதவதி இனியும் தனக்கு இந்த அழகு எதற்கு என்று கருதி, ஈசனிடம் வேண்டி பேய் உருவத்தைப் பெற்றார். அந்த உருவத்தோடு பல தலங்களுக்குச் சென்று வந்தவர், இறுதியில் கயிலையில் வாழும் இறைவனை அங்கேயே சென்று தரிசிக்க முடிவு செய்தார்.

இறைவன் வாழும் கயிலையில் கால் பதித்து நடக்கக்கூடாது என்பதற்காக, தலையால் நடந்து சென்றார். அதைப் பார்த்த பார்வதிதேவி, “இறைவா.. தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?” என்று கேட்க, அதற்கு சிவபெருமான், “இவள் நம்மை போற்றும் அம்மை காண்” என்று பதிலளித்தார்.


இறைவனே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்ததாலும், இவர் பின்னாளில் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப் பட்டார். 63 நாயன்மார்களில், அனைத்து நாயன்மார்களும் நின்ற திருக்கோலத்திலேயே காட்சி தர, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். தாய்மைக்கு அவ்வளவு சிறப்பு .

இத்தனை சிறப்பு வாய்ந்த காரைக்கால் அம்மையாருக்கு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. இறைவனுக்கு மாங்கனியை விருந்தளித்த, இந்த அன்னையின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக காரைக்காலில் ஒவ்வொரு வருடமும் ‘மாங்கனி திருவிழா’ நடத்தப்படும். காரைக்கால் சுந்தராம்பாள் உடனாய கயிலாசநாதர் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு வரும் இறைவன் மீது, பக்தர்கள் பலரும் சூழ்ந்து நின்று மாங்கனிகளை வீசி வழிபாடு செய்வார்கள். அப்படி வீசப்படும் மாங்கனிகளை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் பக்தர்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக காரைக்கால் பகுதியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.