இன்று திருவொற்றியூர் தேரோட்டம்... 47 அடி உயரத் தேரில் சந்திரசேகரர் உலா - போக்குவரத்து மாற்றம்!
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள 2,000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு தியாகராஜ சுவாமி (வடிவுடையம்மன்) திருக்கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று பிப்ரவரி 28ம் தேதி சனிக்கிழமை காலை மிகவும் விமரிசையாகத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழாவின் 7-ஆம் நாள் நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
இன்று காலை 9:05 மணி முதல் 10:10 மணிக்குள் உற்சவர் சந்திரசேகரர் சுவாமி திரிபுரசுந்தரி அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் பிரம்மாண்டமான திருத்தேரில் எழுந்தருளுகிறார். சுமார் 47 அடி உயரமுள்ள இந்த அழகிய மரத்தேர், வண்ணத் துணிகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, நான்கு மாட வீதிகளிலும் பவனி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ஆரூரா... தியாகேசா... ஒற்றியூரா...' எனப் பக்தி முழக்கமிட்டுத் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். சிவனடியார்கள் திருப்புகழ் பாடியும், மேளதாளங்கள் முழங்கியும் தேரின் முன்னே அணிவகுத்துச் செல்கின்றனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம், கைலாய வாத்தியங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. வரும் மார்ச் 2-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10:10 மணி முதல் 11:55 மணிக்குள் கல்யாணசுந்தரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அதே நாளில் மாலை 63 நாயன்மார்கள் பல்லக்கில் மாட வீதிகளில் ஊர்வலமாக வரும் கண்கொள்ளாக் காட்சி நடைபெறும்.
இந்தக் கோயிலில் உள்ள தியாகராஜ சுவாமி 'அஜபா நடனத்திற்கு' புகழ்பெற்றவர். பிரம்மோற்சவத்தின் போது அவர் ஆடும் நடனத்தைக் காண்பது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.