இன்று திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபாடு... முதல்வர் விஜய் ஸ்டைலில் சைகை காட்டி இந்து அமைப்பினர், பாஜகவினர் கொண்டாட்டம்!
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசையும் மதுரை மாவட்ட நிர்வாகத்தையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இத்தீர்ப்பை வரவேற்று திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் திரண்ட இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசாருக்கு அல்வா வழங்கியும், முதல்வர் விஜய் பாணியில் சைகை காட்டியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் மிகுந்த உற்சாகமடைந்தனர். நேற்று மாலை திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் திரண்ட அவர்கள், சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக நின்றிருந்த காவல்துறையினரிடம் அல்வா மற்றும் லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கிய அவர்கள், “காவல்துறைக்கு அல்வா… தமிழக அரசுக்கும் அல்வா… இந்தாங்க பிடிங்க… சாப்பிடுங்க… நல்லாயிருக்கும்” எனக் கூறியபடி இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் காட்டிய சைகையைப் போலச் செய்து காண்பித்த அவர்கள், “எப்படி… இப்படி…, எப்படி… இப்படி… முடிச்சுட்டோம்ல… தெய்வம் கேட்டுருச்சுல்ல… ஆர்பிஎப் இங்கே… போலீஸ் லத்தி எங்கே… வெளியேறு வெளியேறு தமிழக காவல்துறையே வெளியேறு, நீதி வென்றது… எங்கள் மலை கந்தன் மலை, வேலை இல்லை, வேலை இல்லை தமிழக காவல்துறைக்கு நாளை வேலை இல்லை… முருகனுக்கு அரோகரா” எனத் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், போராட்டக்காரர்கள் வைத்திருந்த பேனரில், “திருப்பரங்குன்றம் மலையின் முழுப் பாதுகாப்புப் பொறுப்பையும் தமிழக காவல்துறை உடனடியாகவும், சுமூகமாகவும் சி.ஆர்.பி.எஃப். வசம் ஒப்படைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது. இன்று தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.