இன்று தமிழகத்தில்19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை... 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தெற்கு உள் கர்நாடகம் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நடப்பு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 15 சதவீத மழைப் பற்றாக்குறை நிலவுவதாகவும், சென்னையில் 32 சதவீதமும், செங்கல்பட்டில் 51 சதவீதமும் மழை குறைவாகப் பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால், நவம்பர் 28-ஆம் தேதி டெல்டா, தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நவம்பர் 29-ஆம் தேதி வட தமிழகம் மற்றும் சில டெல்டா, மத்திய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும். மீண்டும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31–32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24–25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.