இன்று ஆலோசனை... 2,320 டாஸ்மாக் பார்கள் மூடல் - புதிய விதிமுறைகளுடன் டெண்டர் விடத் திட்டம்!

 

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 2,320 டாஸ்மாக் பார்களின் உரிமக்காலம் கடந்த ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவை அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை பார்களைத் திறக்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த பார்களுக்கான உரிமம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்டது. வழக்கமாக இந்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைய வேண்டிய இந்த உரிமம், தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்ததால் அனைத்துப் பார்களும் மூடப்பட்டுள்ளன.

பார்கள் மூடப்பட்டுள்ளதால் புதிய டெண்டர் கோருவதா அல்லது தற்போதைய உரிமத்தையே மேலும் சில மாதங்களுக்கு நீட்டிப்பதா என்பது குறித்துத் தீர்மானிக்க டாஸ்மாக் நிர்வாகத்தின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் இந்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். பார்கள் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு மாதத்திற்குச் சுமார் 400 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த இழப்பைத் தவிர்க்க விரைந்து முடிவெடுக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

அரசுத் தரப்பில் புதிய டெண்டர் விடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு புதிய டெண்டர் விடப்படும் பட்சத்தில், அதில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. பார்களில் காலி மது பாட்டில்களை முறையாகச் சேகரித்துத் திரும்பப் பெறும் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்த விதிமுறைகள் சேர்க்கப்படலாம்.

பார்களின் உள்கட்டமைப்பு, தூய்மை மற்றும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் வெளியே மது குடித்துவிட்டுப் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், பார்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளன.

தற்போது பார்கள் மூடப்பட்டுள்ளதால் கடைகளுக்கு வெளியே அல்லது பொது இடங்களில் மக்கள் கூடி மது அருந்துவதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய கூட்டத்தின் முடிவில் புதிய டெண்டர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தெளிவான விபரம் தெரியவரும்.