இன்று வேளாண் பட்ஜெட் - "விவசாயிகளின் எதிர்பார்ப்பு இது தான்" - பி.ஆர்.பாண்டியன் பேட்டி!

 

சீர்காழி தனியார் கூட்டுறவு வங்கியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்த அவர், இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் நீர்வளத்துறைக்குத் தொலைநோக்குப் பார்வையோடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

நீர்வளப் பாசனத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொள்ளிடம் - காவிரி ஆறுகளில் கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் அமைப்பதை ஆய்வு செய்ய முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடியும், அலையாத்திக் காடுகளை வளர்க்க ரூ.1,732 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பெண்களுக்கு ஆடுகள் வளர்க்க ரூ.110 கோடியும், கறவை மாடுகள் வழங்கி பால் உற்பத்தியைப் பெருக்க ரூ.10,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும்.

இன்று தாக்கல் செய்யப்படவுள்ள தனி வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியின்படி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதக் கடன்களும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாக வேண்டும்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என ஆதரவு விலை/கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.