இன்று நிகழும் அபூர்வ முழு சூரிய கிரகணம்.. இந்தியாவில் பார்க்க முடியுமா?!
விண்ணில் நிகழும் அபூர்வ வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. உலகின் பல பகுதிகளில் இதைக் காண முடிந்தாலும், இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு சரியாக நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி பூமிக்கு வராமல் முழுமையாக மறைக்கப்படுகிறது. இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை அல்லது இரவு போன்ற சூழல் உருவாகும். கிரகணத்தின் உச்சகட்டத்தில், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கரோனா' பகுதி மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும்.
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கு நிகழ்கிறது. இந்தியாவில் அப்போது இரவு நேரமாக இருப்பதால், இதைக் காணும் வாய்ப்பு இல்லை. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாக முழு கிரகணத்தின் பாதை செல்கிறது. குறிப்பாக வடக்கு ஸ்பெயினில் சூரிய அஸ்தமன நேரத்தின் போது இந்நிகழ்வு நடப்பதால் அரிய காட்சியாக இருக்கும்.
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வட அமெரிக்கா, கனடா, அலாஸ்கா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் பகுதி சூரிய கிரகணமாகக் காட்சியளிக்கும். இந்த அரிய நிகழ்வைக் காண ஐஸ்லாந்து, கிரீன்லாந்து போன்ற நாடுகளுக்கு உலகெங்கிலும் இருந்து ஏராளமான வானியல் ஆர்வலர்களும் புகைப்படக் கலைஞர்களும் குவிந்துள்ளனர்.
அடுத்த ஆண்டும், அதாவது 2027 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. எனினும், அந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க முடியாது; வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஏமன் போன்ற நாடுகளில் மட்டுமே காண முடியும்.