இன்றைய விஜய் பிரசாரம் திடீர் ரத்து... அடுத்தடுத்து ரத்து செய்யப்படும் விஜய் கூட்டங்கள் - தொண்டர்கள் ஏமாற்றம்!

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் இன்று மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரசாரப் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் நேரக் கட்டுப்பாடு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை தொகுதியில் பிரசாரம் செய்யத் தவெக தரப்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அங்கு பிரசாரம் செய்யக் காவல்துறை தரப்பில் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் நிலையில், ஒரு மணி நேரப் பிரசாரம் என்பது போதுமானதாக இருக்காது. எனவே, மிகக் குறுகிய நேரத்தில் பிரசாரத்தை முடிப்பது சரியாக இருக்காது என்பதால், இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்வதாகத் தவெக தலைமை அறிவித்துள்ளது.

நேற்று சென்னை தி.நகர் பகுதியில் விஜய் நடத்த இருந்த பிரசாரக் கூட்டமும் இதே போன்ற காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது இன்று நடக்கவிருந்த சைதாப்பேட்டை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் விஜய்யின் பிரசாரத் திட்டம் பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின் பிரசாரங்களுக்குக் காவல்துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், வேண்டுமென்றே நேரக் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அக்கட்சித் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டே இந்த நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.