இன்றைய விஜயின் பிரசாரம் திடீர் ரத்து..தொண்டர்கள் ஏமாற்றம்... 11-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

 

தவெக தலைவர் விஜய், இன்று ஏப்ரல் 9ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களால் இந்தப் பிரசாரம் வரும் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பிரசாரம் செய்ய ஏற்கனவே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், புதுச்சேரி மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளாகக் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் இருப்பதால், பாதுகாப்பு மற்றும் தேர்தல் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு இன்றைய பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, வரும் ஏப்ரல் 11-ம் தேதி விஜய் இந்தப் பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அனுமதியைக் கோரி த.வெ.க சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்திலும் விஜயின் பிரசாரத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 10ம் தேதி புதுக்கோட்டையில் பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அதுவும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதன்பின்னர் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் வருகையை எதிர்பார்த்துக் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பிரம்மாண்ட மேடைகள் மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தற்போது பிரசாரம் தள்ளிப்போயுள்ளதால் தொண்டர்கள் சற்று ஏமாற்றமடைந்தாலும், 11-ம் தேதி நடைபெறும் பிரசாரம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் எனத் த.வெ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.