கழிவறைக்குச் சென்ற 9 மாணவர்கள் மீது மின்சாரம் தாக்கி மயக்கம்... பெரும் பரபரப்பு! 

 

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலின் போது தற்காலிகமாக வழங்கப்பட்ட மின் இணைப்பு பாதுகாப்பற்ற முறையில் விடப்பட்டதே இந்த விபட்டுக்கு முக்கியக் காரணமாகும். தேர்தல் முடிந்த பின்னரும் அந்த மின் வயர் அகற்றப்படாமல் இருந்ததால் சேதமடைந்த மின் கம்பி கழிவறை இரும்பு கதவில் உரசியுள்ளது.

இதனால் கதவு முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், கழிவறையைப் பயன்படுத்த வந்த 9 மாணவர்கள் கதவைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு உடனடியாக தொப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதுடன் மற்றவர்கள் வீடு திரும்பினர்.

இந்த விபத்தை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைக்க முயன்றதாகப் பெற்றோர் மத்தியில் கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன் பள்ளி முன்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்திப் பள்ளித் தலைமையாசிரியர் செந்தாமரையைப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.