ஆம்னி பேருந்துகளில் கட்டண வசூல் கொள்ளை... புகாரளிக்க எண்கள் அறிவித்து போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!
காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோரிடம் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், பயணிகள் உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம் எனத் தமிழகப் போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து சென்னைக்கு ரூ.4,500, நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.6,500, கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.6,000 வரை ஆம்னி பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆம்னி பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகள் 93848 08333 அல்லது 1800 425 6151 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ புகார் அளிக்கலாம்.
தொலைபேசி வாயிலாக மட்டுமின்றி, tc.tn@nic.in என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் பயணிகள் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் எனப் போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.