நல்லூரில் 4 மாசத்துல 3வது முறையா சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு!

 

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில், நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்குள் 3-வது முறையாகக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள உள்ளூர்வாசிகளுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ. 350-ல் இருந்து ரூ. 360 ஆக (ரூ. 10 உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ரூ. 10 முதல் ரூ. 15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கும் அதற்கு ஏற்பக் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக் கட்டணங்களை மாற்றியமைப்பது வழக்கம். ஆனால், நல்லூர் சுங்கச்சாவடியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள் மற்றும் 'இணைப்புக் காரணி' தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாகவே இந்த அடுத்தடுத்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் கட்டண உயர்வு பொதுமக்களுக்குப் பெரும் மறைமுகச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு லாரிகளின் வாடகை அதிகரிக்கும்.

லாரி வாடகை உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, அவற்றின் சில்லறை விற்பனை விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.