வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு!
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (மே 23) நள்ளிரவு முதல் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை முகமை அறிவித்துள்ளது. இதனால் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த புதிய அறிவிப்பின்படி வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ரூ.25 முதல் ரூ.100 வரை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1ஆம் தேதிதான் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 66 சுங்கச்சாவடிகளில் ஆண்டு கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சுமை குறைவதற்குள் தற்போதைய கூடுதல் உயர்வு சாமானிய மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.
பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், தற்போது ஒன்றரை மாத காலத்திற்குள் மீண்டும் ஒரு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த பொருளாதார பேரிடி லாரி மற்றும் கார் உரிமையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்த திடீர் சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.