undefined

கிலோ ரூ.10க்கு சரிந்த தக்காளி விலை.. .செடியிலேயே பறிக்காமல் விடப்படும் அவலம்!

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதன் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி அமோகமாக நடைபெற்றுள்ளது. தற்போது அறுவடை சீசன் என்பதால், மார்க்கெட்டுகளுக்குத் தக்காளியின் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

வரத்து அதிகரிப்பால் தக்காளியின் விலை கடுமையாகச் சரிந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை ஓரளவுக்கு நல்ல விலைக்கு விற்ற தக்காளி, தற்போது கிலோ ரூ. 10 முதல் ரூ. 15 வரை மட்டுமே விற்பனையாவதாகக் கூறப்படுகிறது. தக்காளி பறிப்பதற்கான கூலி மற்றும் போக்குவரத்துச் செலவு கூடக் கிடைக்காத நிலையில், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால் பல இடங்களில் தக்காளியைப் பறிக்காமல் செடியிலேயே அழுக விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 18 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் தரத்தைப் பொறுத்து ரூ. 25 முதல் ரூ. 30 வரை விற்பனையாகிறது.

தக்காளி விலைக் குறைவு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், போதிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகக் கூறி, அரசு தகுந்த நிவாரணம் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.