அதிர்ச்சி ... சுட்டெரிக்கும் வெயிலால் கருகும் செடிகள்... கிடுகிடுவென உயரும் தக்காளி விலை!
தமிழகத்தில் வாட்டி வதைக்கும் கடும் கோடை வெயில் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதன் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் போன்ற முக்கிய தக்காளி சாகுபடி மாவட்டங்களில் நிலவும் அதீத வெப்பத்தால் செடியிலேயே பழங்கள் காய்ந்து விடுகின்றன. பல இடங்களில் தக்காளிப் பிஞ்சுகளும் பூக்களும் கருகி விடுவதால் சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தக்காளியின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற மேச்சேரி நாட்டு தக்காளி மற்றும் ஓமலூர், தாரமங்கலம் பகுதிகளில் விளையும் தக்காளிகள் வெயிலின் தாக்கத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. தற்போது சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், விளைச்சல் கருகியதால் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நிழல் வலைகளை அமைத்துப் பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் முயற்சி செய்தாலும், கத்திரி வெயிலின் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைந்து இன்னும் சில வாரங்களில் தக்காளி விலை 100 ரூபாயைத் தொட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். சமையலில் தவிர்க்க முடியாத தக்காளி விலை ஏறுவதால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலையும் எகிறி வருவது ஏழை எளிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்த்து வருகிறது.