நாளை சூரசம்ஹாரம்... அசுரர்களின் பிரம்மாண்ட உருவ பொம்மைகள் தயாரிப்புப் பணி மும்முரம்!

 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டிப் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 15) மாலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, அசுரர்களின் உருவ பொம்மைகளைத் தயாரிக்கும் பணி பழனி பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் இறுதிக்கட்டத்தை எட்டி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த சில நாட்களாகச் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில், முருகப்பெருமான் அசுரர்களை வதம் செய்யும் நிகழ்வு பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் நடைபெறும்.

சூரசம்ஹார நிகழ்விற்காகத் தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகன் மற்றும் சூரபத்மன் ஆகிய நான்கு அசுரர்களின் பிரம்மாண்ட உருவ பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

பழனியில் உள்ள பெரியநாயகி அம்மன் திருக்கோயில் வளாகத்தில், மூங்கில் தட்டிகள், காகிதக் கூழ் மற்றும் வண்ணக் காகிதங்களைக் கொண்டு இந்த உருவ பொம்மைகளுக்கு இறுதிக்கட்ட வண்ணம் தீட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த அசுரர்களின் உருவ பொம்மைகளைத் தயாரிக்கும் புனிதப் பணியில் குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழாவின்போது, மிகுந்த பக்தியுடனும், நேர்த்தியுடனும் இந்த அசுரர்களின் உருவங்களை இக்குடும்பத்தினர் வடிவமைத்துக் கொடுத்து வருகின்றனர்.

உருவ பொம்மைகள் தயாரிப்பு மற்றும் அலங்காரப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், அவை முறைப்படி திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

நாளை (நவம்பர் 15) மாலை பழனி மலையடிவாரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில், ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு அசுரனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹார வைபவம் நடைபெற உள்ளது.

சூரசம்ஹார நிகழ்வை நேரில் தரிசிப்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.