நாளை சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்?! நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2வது அமர்வு!

 

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நடுநிலையோடு செயல்படவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாளை மார்ச் 9ம் தேதி இந்தத் தீர்மானம் மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. நாளை சபாநாயகர் ஓம்பிர்லா தனது இருக்கையில் அமர மாட்டார் என்றும், உறுப்பினராக சபையில் அமர்ந்து தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்புள்ளதால், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு தரப்பும் தங்களது எம்பிக்களுக்கு 'மூன்று வரி கொரடா உத்தரவை' பிறப்பித்துள்ளன. மார்ச் 9 முதல் 11-ஆம் தேதி வரை அனைத்து எம்பிக்களும் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 வரை நடைபெறும் இந்த இரண்டாவது அமர்வில் பல்வேறு அமைச்சகங்களின் நிதி ஒதுக்கீடு குறித்த விரிவான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும். நிதி மசோதா 2026-27 நிதியாண்டிற்கான வரி விதிப்பு மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்படும். மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இடைவேளைக்குப் பிறகு தற்போது நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. சபாநாயகருக்கு எதிரான இந்தத் தீர்மானம், சமீப கால இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மிக அரிதான மற்றும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.