தர்மேந்திர பிரதான் பதவிக்காலத்தைச் சூழ்ந்த 10 முக்கிய சர்ச்சைகள்!
தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கம், தேர்வுத் தொடர்பான முறைகேடுகள் மற்றும் பாஜக அல்லாத மாநிலங்களுடன் ஏற்பட்ட தொடர் மோதல்கள் என, ஒன்றிய கல்வி அமைச்சராகத் தர்மேந்திர பிரதானின் நான்கரை ஆண்டுகாலப் பதவிக்காலம் பல பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தது. குறிப்பாகத் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் கல்வி நிதியை வழங்க அவர் மறுத்தது வரை, அவரது பதவிக்காலத்தில் எழுந்த 10 முக்கியச் சர்ச்சைகள் குறித்துப் பார்க்கலாம்.
1. பதவியேற்பின் போதே எழுந்த எதிர்ப்பு (2024)
2024 ஜூன் மாதம் தர்மேந்திர பிரதான் ஒன்றிய அமைச்சராகப் பதவியேற்ற போது, நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் "அவமானம், அவமானம்" என முழக்கமிட்டுக் கடும் எதிர்ப்பைப் பதிவிட்டனர்.
2. நீட்-யுஜி வினாத்தாள் கசிவுகள் (2024 & 2026)
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான (NEET-UG) வினாத்தாள் 2024 மற்றும் 2026 ஆகிய இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் கசிந்து நாட்டையே உலுக்கியது. இது தர்மேந்திர பிரதானின் பதவிக்காலத்தில் எழுந்த மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்தது.
3. யுஜிசி-நெட் தேர்வு ரத்து (ஜூன் 2024)
2024 ஜூன் 19 அன்று நடைபெற்ற யுஜிசி-நெட் தேர்வின் வினாத்தாள்கள் கசிந்து டெலிகிராம் மற்றும் டார்க் நெட்டில் (Dark Web) பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தேர்வு நடந்த அடுத்த நாளே ரத்து செய்யப்பட்டது.
4. தேசிய தேர்வு முகமையின் (NTA) குழப்பங்கள்
நீட், ஜேஇஇ, கியூட், நெட் போன்ற முக்கியத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA), தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் தவறான மதிப்பெண் மதிப்பீடு காரணங்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்ட போதிலும், 2026 வரை இக்குழப்பங்கள் தொடர்ந்தன.
5. சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தல் குளறுபடி
2026-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (On-screen marking) மதிப்பீட்டு முறை, மதிப்பெண் முரண்பாடுகள், மோசமான ஸ்கேன் தரம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
6. பிஎம் எஸ்ஹெச்ஆர்ஐ (PM SHRI) பள்ளிகளுக்கு எதிர்ப்பு
2022-இல் தொடங்கப்பட்ட 'பிஎம் எஸ்ஹெச்ஆர்ஐ' திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கையெழுத்திட மறுத்தன. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வைக்கவே சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை ஒன்றிய அரசு முடக்குவதாக அம்மாநிலங்கள் குற்றம் சாட்டின.
7. மும்மொழித் திட்டம் & இந்தி திணிப்பு சர்ச்சை
தேசியக் கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிபிஎஸ்இ கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் மோடி அரசு மறைமுகமாக இந்தியைத் திணிப்பதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
8. என்சிஇஆர்டி (NCERT) பாடநூல் நீக்கங்கள் (2022-2023)
என்சிஇஆர்டி பாடநூல்களிலிருந்து முகலாய வரலாறு, 2002 குஜராத் கலவரங்கள், பனிப்போர் மற்றும் இந்தியாவின் ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்பான அத்தியாயங்கள் நீக்கப்பட்டன. இது பாடப் சுமையைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கல்வி அமைச்சகம் கூறினாலும், கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சி எனக் விமர்சனங்கள் எழுந்தன.
9. துணைவேந்தர் நியமன வரைவு விதிகள் (2025)
2025 ஜனவரியில் யுஜிசி வெளியிட்ட வரைவு விதிகளில், கல்வியாளர்கள் அல்லாதவர்களையும் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கவும், தேர்வுக் குழுக்களில் ஆளுநர்களின் பங்கை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டது. இது மாநில உரிமைகள் மற்றும் பல்கலைக்கழக சுயாட்சியைப் பறிக்கும் செயல் எனப் பல மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றி எதிர்த்தன.
10. சாதி சமத்துவ விதிகள் & உச்ச நீதிமன்றத் தடை (2026)
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் களைய யுஜிசி புதிய விதிகளை அறிவித்தது. ஆனால், அவ்விதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 2026 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் அவற்றுக்குத் தடை விதித்து 2012-ஆம் ஆண்டின் பழைய விதிகளையே தொடர உத்தரவிட்டது.