அரசு மருத்துவமனையில் கொடூரம்... கால் முறிவு சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டம்!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதே உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
பைக் விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரன் என்ற இளைஞரின் கையில் இருந்த காயத்திற்குக் கூட 4 நாட்களாக மருந்து போடப்படாமல் உதாசீனப்படுத்தியதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கட்டு போடுவது உட்பட அனைத்துப் பராமரிப்புச் பணிகளுக்கும் மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதாக அவர்கள் சாடியுள்ளனர். முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதால் உயிரிழந்த பரமேஸ்வரனின் உடலைப் பெற மறுத்து, உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞரின் உயிரிழப்பு மற்றும் உறவினர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது: அதில், கால் முறிவு ஏற்பட்டுச் சிகிச்சையில் இருந்த பரமேஸ்வரனுக்குத் திடீரென நரம்புகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூறாய்வு முடிவுகள் வெளியான பிறகே உயிரிழப்பிற்கான துல்லியமான முழுமையான காரணம் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்குப் பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு உரிய ஆதாரம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகாரளிக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.