கொடைக்கானல் முழுவதும் இலவசமாகச் சுற்றிக் பார்க்கலாம் - சுற்றுலா பயணிகள் வரவேற்பு!
பக்ரீத், கோடை விடுமுறை, நல்ல சீதோஷ்ணம் என்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள முக்கியப் பொழுதுபோக்குத் தலங்களை எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாக பார்த்து ரசிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொடைக்கானல் வனத்துறையின் நேரடித் தடையற்ற கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மிக முக்கியமான இடங்களுக்கு இந்த இலவச அனுமதி பொருந்தும்.
பில்லர் ராக், குணா குகை, பைன் மரக் காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்காக வழக்கமாக வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணங்கள் அனைத்தும் வரும் மே 31ம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச அறிவிப்புக்குக் பின்னால் ஒரு முக்கிய நிர்வாகக் காரணம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தற்போது கோடை விடுமுறை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்த முக்கியச் சுற்றுலாத் தலங்களின் நுழைவுச் சீட்டு வழங்கும் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
டிக்கெட் எடுப்பதற்காக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் கொடைக்கானல் மலைச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பல மணிநேரம் அவதியுற்று வந்தனர். இந்த நெரிசலைத் தவிர்த்து, வாகனங்கள் தடையின்றிச் சீராகச் செல்வதற்காகவே இந்தத் தற்காலிக இலவச அனுமதி அதிரடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் துரித நடவடிக்கையால் கட்டணக் கவுண்டர்களில் நேரம் வீணாவது தவிர்க்கப்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளும் எவ்வித அலைச்சலுமின்றித் தங்களின் விடுமுறையைக் கொடைக்கானலில் மகிழ்ச்சியாகக் கழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.