கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி - 2 நாட்கள் கட்டணமின்றி அனுமதி!

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம் கோரி, வாகன ஓட்டுநர்கள் இன்று திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கும் முறையால், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர்கள் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்திப் போராட்டம் நடத்தியதால் மலைச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டும், போராட்டத்தைக் கைவிடச் செய்யும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை மே 2 மற்றும் மே 3 ஆகிய இரண்டு தேதிகளில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய இடங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த இரண்டு நாட்களும் சுற்றுலாப் பயணிகள் எவ்விதக் கட்டணமுமின்றி இந்தப் பகுதிகளைக் கண்டு ரசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், மே 4-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. கொடைக்கானலின் 5 முக்கிய இடங்களில் விரைவாகத் தகவல்களைப் பெற்று நுழைவுச் சீட்டு எடுக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுலாத் தொழிலை மேம்படுத்தவும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.