ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற ஆழியார் கவியருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, அங்குக் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
வால்பாறை பகுதியிலுள்ள சக்தி எஸ்டேட், தலைநார் எஸ்டேட் மற்றும் லில்லி முருகன் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் காலை முதலே இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சோலைக் காடுகள் வழியே வந்த நீர், ஆழியார் கவியருவியில் திடீரெனப் பெருக்கெடுத்து வெள்ளமாகப் பாய்ந்தது.
அருவியில் தண்ணீர் வரத்து அதிவேகமாக அதிகரிப்பதைக் கண்ட வனத்துறையினர் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டனர். குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அவர்களை அவசர அவசரமாக அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பாதுகாப்பு நடவடிக்கையாகக் கவியருவியில் குளிக்கத் தற்போது தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அருவியில் நீர்வரத்து சீரானதும் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், அதுவரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு வர வேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.