கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்!

 

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உலகப் புகழ்பெற்ற அரிய வகை நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது ஆங்காங்கே கொத்து கொத்தாகப் பூக்கத் தொடங்கியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் பசுமையான புல்வெளிகள் மற்றும் பள்ளத்தாக்குச் சரிவுகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த அரிய தாவரங்கள் இயற்கை எழிலோடு வளர்ந்துள்ளன.

மலைப் பிரதேசங்கள் முழுவதும் நீல நிறப் பாயைப் பரப்பியது போன்றும், நீலப் போர்வை போர்த்தியது போன்றும் காட்சியளிக்கும் இந்த மலர்கள் காண்போரைக் கவரும் வகையில் இயற்கை அன்னைக்கு அழகூட்டி வருகின்றன.

கொடைக்கானலில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கும் செய்தி பரவியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

இந்த அற்புத இயற்கை நிகழ்வைச் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கண்டு ரசித்து, ஒளிப்படங்கள் மற்றும் செல்ஃபிக்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் கொடைக்கானலின் முக்கியச் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தற்போது பயணிகளின் கூட்டத்தால் களைகட்டத் தொடங்கியுள்ளன.