ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீரான நிலைக்கு வந்ததைத் தொடர்ந்து, அருவிகளில் குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த பருவமழை குறைந்ததைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாகக் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியாக நீடித்துச் சீராக நிலவி வருகிறது.
நீர்மட்டம் சீரானதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் விலக்கிக் கொண்டுள்ளது.
நேற்று ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்கவும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.