டிராக்டர் கவிழ்ந்து விபத்து 6 பேர் பலி, 40 பேர் படுகாயம்... பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம் !
மத்திய பிரதேச மாநிலம் அனூப்பூர் மாவட்டத்தில் உள்ள பத்மேனியா கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு டிராக்டரில் நேற்று மாலை புறப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள பிஜௌரா கிராமத்தில் நடைபெறவிருந்த ஒரு ஆன்மீக வழிபாட்டுப் பூஜையில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த டிராக்டர் கரன்பத்தர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிஜௌரா கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த டிராக்டர் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 44 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி மேலும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த 40 பேருக்குத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.