டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 12 வயது பள்ளி மாணவன் மீது சக்கரம் ஏறிப் பரிதாப பலி!

 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள மண்டலநாயன குண்டா பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மோனித், விடுமுறை நாளைக் கழிப்பதற்காகத் தனது தாத்தாவின் விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளான். அங்குப் பயிர் நிலங்களை உழுவதற்காகக் கொண்டு வரப்பட்ட பிரம்மாண்ட டிராக்டர் வாகனத்தின் மீது ஏறி, அந்தச் சிறுவன் ஆசையாக அமர்ந்து பயணித்துள்ளான். அப்போது விவசாய நிலத்தின் மேடுபள்ளங்களில் வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த 12 வயது மாணவன் நிலைதடுமாறிக் கீழே விழுந்துள்ளான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் கீழே விழுந்ததைச் சற்றும் கவனிக்காத ஓட்டுநர், தனது பாட்டிற்குத் டிராக்டர் வாகனத்தை  முன்னோக்கி இயக்கியுள்ளார். இதனால் இரும்புச் சக்கரங்கள் கொண்ட அந்த கனரக வாகனம், தரையில் விழுந்து கிடந்த சிறுவன் மோனித் மீது மிகக் கொடூரமாக ஏறி இறங்கியது. இதில் அந்தப் பள்ளி மாணவனின் உடல் நசுங்கி, பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு அவசர அவசரமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த தலைமை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகத் கூறி  அவனது உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.