சோகம்... சாலையின் தடுப்பு சுவரில் பைக் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மைசூர் சாலைப் பகுதியில் நேற்று மாலை  நடந்த பயங்கர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த கௌரி சங்கர் (22) மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த அதுல் சி.பி (22) ஆகிய இரு இளைஞர்களும் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள முன்னணி மருத்துவக் கல்லூரி ஒன்றில் நர்சிங் இறுதி ஆண்டு பயின்று வந்தனர்.

கல்லூரி விடுமுறை நாளான நேற்று, இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் மைசூரில் இருந்து கெங்கேரி பகுதியை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இருவரும் ஹெல்மெட் ஏதும் அணியாமல் பிரதான சாலையில் பயணித்துள்ளனர். பைக்கை ஓட்டிச் சென்ற கௌரி சங்கர், சாலையின் விபரீதத்தை உணராமல் வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாகத் தெரிகிறது.

இவர்களது பைக் மைசூர் சாலையில் உள்ள ஆர்.ஆர். பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாகக் கௌரி சங்கரின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்தது. கண்சிமிட்டும் நேரத்திற்குள் பாய்ந்து சென்ற அந்த பைக், மைசூர் சாலையின் நடுவே இருந்த சிமெண்ட் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுச் சாலையின் நடுவே விழுந்தனர்.

ஹெல்மெட் அணியாததால், இருவருக்குமே தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற மைசூர் போக்குவரத்துப் பிரிவு போலீசார், உயிரிழந்த இரு மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நர்சிங் படித்து எதிர்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய இரு மாணவர்களின் வாழ்க்கை, கவனக்குறைவான ஓட்டுதலால் பாதியிலேயே முடிந்துபோனது குடும்பத்தினரிடமும், சக மாணவர்களிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.