தாம்பரம் ரயில் நிலையத்தில் சோகம்.. 24 வயது தீயணைப்பு அதிகாரி மாரடைப்பால் திடீர் மரணம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இளம் தீயணைப்பு அதிகாரி ராகுல்மதி (24), தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களிடையேயும் பொதுமக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல்மதி, தீயணைப்புத்துறையில் இளம் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள தீயணைப்பு பயிற்சிப் பள்ளிக்குச் செல்வதற்காக அவர் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தார்.
ரயில் நிலையத்தின் நடைமேடைப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராகுல்மதி மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இளம் வயதில் தீயணைப்பு அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.