20 வயதில் துயரம்... கணவன் வீடியோ காலில் பேசாததால் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை!
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில், கணவர் போன் அழைப்பை ஏற்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் திருமணமான 20 வயது இளம்பெண் எலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நெக்கொண்டா மண்டலத்திலுள்ள பொல்லிகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா (20). இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மஹபூபாபாத்தைச் சேர்ந்த வீட்டுவசதி நிதி மேலாளரான பனோத் ஹுசைன் என்பவருடன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
அகிலா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2ம் தேதி குழந்தை அழுது கொண்டிருந்த போது அவனுடன் பேசுவதற்காகக் கணவர் ஹுசைனுக்கு வீடியோ கால் செய்துள்ளார்.
கணவர் ஹுசைன் அந்த அழைப்பை ஏற்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அகிலா, மஹபூபாபாத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் பசையை சாப்பிட்டுள்ளார்.
இதனைக் கவனித்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், உடல்நிலை மோசம் அடைந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.