தமிழகத்தில் தொடரும் அவலம்... தெருநாய்கள் கும்பலாகக் கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!
Sep 3, 2026, 16:25 IST
கும்பகோணத்தில் சாலையோரம் படுத்துறங்கிக் கொண்டிருந்த 75 வயது முதியவரைத் தெருநாய்கள் கும்பலாகச் சேர்ந்து கடித்துக் குதறியதில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (75) என்ற முதியவர், கும்பகோணம் பாலக்கரை - சென்னை சாலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று சாலையோரம் படுத்துறங்கிக் கொண்டிருந்த அவரைச் சுற்றிவளைத்த சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரை மிகவும் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளன.
படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.