சோகம்... உணவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை மிதித்துக் கொன்ற யானை!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யானை தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரின் ராஜ் நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு சுப நிகழ்ச்சி அல்லது விழாவிற்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டிருந்தது. பாகன் உமேஷ் கோஸ்வாமி அந்த யானையை வீதி வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விஜய் ஹோல்கர் (49) என்பவர், யானை மீது கொண்ட அன்பால் அதற்கு வெல்லம் சாப்பிடக் கொடுத்துள்ளார். ஆனால், வெல்லத்தை வாங்கும் போது யானை சற்று முரண்டு பிடித்ததாகக் கூறப்படுகிறது.
யானை கட்டுப்பாட்டை மீறி முரண்டு பிடித்ததால், பாகன் உமேஷ் கோஸ்வாமி தன் கையிலிருந்த கைத்தடியால் யானையைத் தட்டியுள்ளார். இதனால் கடும் ஆக்ரோஷமடைந்த யானை, தனக்கு வெல்லம் கொடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கரைத் தன் தும்பிக்கையால் தூக்கி கீழே தள்ளி, மிதித்துக் கொன்றது. அன்போடு உணவு கொடுக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் யானை மிதித்து உயிரிழந்த சம்பவம் இந்தூர் மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.