திருமணமான 4 மாதங்களில் சோகம்... உடல் உறுப்பு தானம் செய்த புதுமணப் பெண்ணுக்கு அரசு மரியாதை!
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வேலூர் இளம்பெண் நர்மதாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் கருகம்புத்தூரைச் சேர்ந்த நர்மதா (24) என்பவருக்கும், சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் திருவேங்கடம் (27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி, சென்னையில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
காஞ்சிபுரம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாகச் சரக்கு வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் திருவேங்கடத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட, நர்மதாவிற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 24-03-2026 அன்று நர்மதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். தனது மகளின் கனவுகள் சிதைந்த போதிலும், மற்றவர்களின் வாழ்வாவது மலரட்டும் என்ற உயரிய நோக்கில் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.
இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுத் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படி, வேலூர் கருகம்புத்தூரில் வைக்கப்பட்டிருந்த நர்மதாவின் உடலுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். தனது வாழ்வின் வசந்த காலத்தைத் தொடங்கும் முன்பே விபத்தில் மறைந்த நர்மதா, மறைந்தும் வாழும் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.