பெங்களூரில் சோகம்... காதலுக்கு எதிர்ப்பு... ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண்கள்!

 

நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் காதலித்து ஒன்றாக வாழ்வதற்கு அவர்களின் குடும்பத்தினரும் சமூகமும் எதிர்ப்பு தெரிவித்ததால், பெங்களூரு யெலஹங்காவில் ஒரே சேலையில் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்த சிர்ஜனா (22) மற்றும் ரீட்டா (23) ஆகிய இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே பிரிக்க முடியாத தோழிகளாக இருந்துள்ளனர். பின்னாள்களில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு ஊர் மக்கள் மத்தியில் எதிர்ப்பும் கேலியும் கிளம்பவே, இருவரையும் பிரிக்கும் நோக்கில் உறவினர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனர்.

பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட போதிலும், அவர்கள் ஒன்றாகத் தங்க அனுமதிக்கப்படாமல் ரீட்டா பிரேசர் டவுனிலும், சிர்ஜனா பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜக்கூரிலும் தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டனர். பிரித்து வைக்கப்பட்ட போதிலும் வாரத்திற்குச் சில முறை சந்தித்து வந்த அவர்களிடம், ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். மேலும், அவர்களின் உறவைச் சமூகம் ஏற்காது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரிவினால் ஏற்பட்ட மன உளைச்சல், குடும்பத்தினரின் கட்டாயத் திருமண அழுத்தம் மற்றும் சமூக எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் மனமுடைந்த இருவரும், சிவனஹள்ளியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு எதிரே இருந்த மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.