பெங்களூரில் சோகம்... கணவனின் கள்ளத்தொடர்பால் 7 மாதக் குழந்தையைத் தவிக்கவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் கணவனின் சட்டவிரோதத் தொடர்பால் ஏற்பட்ட மன உளைச்சலில், 7 மாதக் குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கமகளூருவைச் சேர்ந்த சானிகா கவுடா (24) என்பவருக்கும், பெங்களூருவில் கேப் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் ஷரன் கவுடாவிற்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே ஷரன் கவுடாவிற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்து, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கர்ப்பிணியாக இருந்த நிலையில் தகராறு தீவிரமடையவே, சானிகா தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். குழந்தை பிறந்த பின்னரும் அவர் கணவரிடம் திரும்பாமல் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், தான் வேறு பெண்ணுடன் பேசிய ஆடியோ பதிவைச் ஷரன் கவுடா, மனைவி சானிகாவின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சானிகா, கணவரைத் தொடர்புகொண்டு கதறி அழுது வாக்குவாதம் செய்துள்ளார். இருவரும் வீடியோ கால் மூலமாக பேசிக் கொண்டிருக்கும் போதே, தனது 7 மாதக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த அறையிலேயே சானிகா, மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து சானிகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், பரப்பன அக்ரஹாரா காவல் துறையினர் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணைக் கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவர் ஷரன் கவுடாவைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.