கோவையில் துயரம்... ரயில் மோதி துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் உயிரிழப்பு!

 

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் கவிதா (45) மற்றும் யசோதா (24) ஆகிய இரு பெண் ஒப்பந்தத் தொழிலாளர்களும் குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ரயிலின் சத்தத்தைக் கவனிக்காமல் அவர்கள் தொடர்ந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டதால், ரயில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.