டெல்லியில் சோகம்... 4 நாட்களாகத் தேடப்பட்ட 15 வயது சிறுவன் சாக்கடையில் சடலமாக மீட்பு!
டெல்லியில் தெருவில் பட்டம் விளையாடிக் கொண்டிருந்த போது திறந்தநிலை சாக்கடையில் தவறி விழுந்து காணாமல் போன 15 வயது சிறுவனின் உடல், 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டு டெல்லியின் ஜசோலா கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் 15 வயது மகன் மிதுன். கடந்த சனிக்கிழமை காலையில் தெருவில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த மிதுன், அறுந்து சென்ற பட்டத்தைப் பின்தொடர்ந்து ஓடிய போது, எதிர்பாராதவிதமாக அங்குப் பராமரிப்பின்றித் திறந்திருந்த கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்துள்ளான்.
சிறுவன் சாக்கடையில் விழுந்தது தெரியாத அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுவனைக் காணவில்லை என கடந்த 4 நாட்களாகப் பல்வேறு இடங்களில் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று அந்த திறந்தநிலை சாக்கடையில் இருந்து மிதுனின் உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஏற்பட்ட அலட்சியப் போக்கு மற்றும் கவனக்குறைவு காரணமாக, தென்கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.