திண்டுக்கல்லில் துயரம்.. FQL ஆன்லைன் முதலீடு மோசடி.. பணம், நிலத்தை இழந்த விவசாயி தற்கொலை!
தென் மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள FQL ஆன்லைன் முதலீடு மோசடியில் பணத்தை இழந்து தவித்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
FQL Exchange மற்றும் VG Investment போன்ற போலி செயலிகள் மூலம் முதலீடு செய்யும் தொகைக்கு இரண்டே மாதங்களில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் FQL ஆன்லைன் செயலியில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த விவசாயி ராஜ், தனது வாழ்வாதாரமான பணத்தையும் நிலத்தையும் இழந்துள்ளார். முதலீடு செய்த பணம் முழுவதுமாக ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலின் காரணமாக விவசாயி ராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
தென் மாவட்டங்களில் இத்தகைய ஆன்லைன் மோசடிகள் மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், காவல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான புகார்கள் குவிகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.